search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்ப்பால் வங்கிகள்"

    தமிழகத்தில் 22 அரசு மருத்துவமனைகளில் பச்சிளம் குழந்தைகளை அரவணைக்கும் தாய்ப்பால் வங்கிகள் இயங்கிவருகிறது.
    சென்னை:

    ரத்த வங்கி, கண் வங்கி என்ற வரிசையில் தாய்ப்பாலையும் சேமித்துவைத்து பயன்படுத்த வேண்டிய காலகட்டத்தை நாம் அடைந்திருக்கிறோம். பிறந்த குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் இன்றியமையாதது. தாய்ப்பால் தான் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, பச்சிளம் குழந்தையின் வளர்ச்சிக்கு அச்சாரமாக திகழ்கிறது.

    பால் சுரக்காத தாய்மார்களின் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள், குறைமாதம் மற்றும் எடை குறைவாக பிறந்த குழந்தைகள், எச்.ஐ.வி. நோயால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கிகள் தான் உதவி வருகின்றன.

    குழந்தைகளின் தேவையை தாண்டி அதிகமாக பால் சுரக்கும் தாய்மார்களும், குழந்தை பிறந்த சில மாதங்களில் வேலைக்கு செல்லும் தாய்மார்களும் தன்னார்வத்துடன் தாய்ப்பால் தானம் செய்துவருகின்றனர்.

    தாய்மார்களிடம் இருந்து சேகரிக்கப்படும் தாய்ப்பால் 200 மி.லி. அளவுள்ள பாட்டில்களில் அடைக்கப்பட்டு 62 டிகிரி வெப்பநிலையில் 30 நிமிடங்கள் பதப்படுத்தப்படுகிறது. பாலில் கிருமித் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டபின் சேமித்துவைக்கப்படுகிறது. இந்த தாய்ப்பாலை 6 மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.

    எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவு உதவி பேராசிரியர் டாக்டர் வைத்தீஸ்வரன் கூறியதாவது:-

    எங்கள் மருத்துவமனையில் ஒரு நாளைக்கு சராசரியாக 5 லிட்டர் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது. மேலும் 5 லிட்டர் தாய்ப்பால் எப்போதும் இருப்பில் இருக்கும். தாய்ப்பால் தானத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டுவருகிறோம். மாதத்துக்கு 1,500 பிரசவங்கள் நடக்கிறது.

    டாக்டர் வைத்தீஸ்வரன்

    ஒரு குழந்தைக்கு அதன் வளர்ச்சியை பொறுத்து சராசரியாக 10 மி.லி. முதல் 20 மி.லி. அளவுக்கு தாய்ப்பால் 2 மணி நேரத்துக்கு ஒருமுறை கொடுக்கவேண்டும். அதன்படி ஒரு நாளைக்கு ஒரு குழந்தைக்கு 100 மி.லி. முதல் 200 மி.லி. தாய்ப்பால் தேவைப்படும். பிரசவம் முடிந்து செல்லும் தாய்மார்கள் தடுப்பூசி போட வரும்போது, பால் அதிகமாக இருந்தால் தானமாக கொடுப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் பிரிவு டாக்டர் கமலரத்தினம் கூறியதாவது:-

    உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தைகள் பால் குடிக்கவில்லை என்றால் தாய்மார்களுக்கு பால் சுரப்பது குறைந்துவிடும். தொடர்ச்சியாக பால் கொடுத்தால் தான் பால் நன்றாக சுரக்கும்.

    எனவே இதுபோன்ற தாய்மார்கள் தாய்ப்பால் தானம் கொடுக்கலாம். வேலைக்கு செல்லும் தாய்மார்கள் சிலர் ‘பேஸ்புக்’ மூலம் தாங்களாக ஒரு குழுவை ஏற்படுத்தி தன்னார்வத்துடன் தாய்ப்பால் தானம் கொடுக்கிறார்கள். தாய்மார்களுக்கு இதுகுறித்து நாங்கள் விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம்.

    எங்களுடைய தாய்ப்பால் வங்கியில் ஒரு நாளுக்கு 1 லிட்டர் முதல் 1½ லிட்டர் பால் சராசரியாக சேகரிக்கப்படுகிறது. 10 முதல் 20 வரையிலான தாய்மார்கள் தானம் கொடுத்துவருகிறார்கள். அதனை சராசரியாக 15 முதல் 20 பச்சிளம் குழந்தைகளுக்கு புகட்டி வருகிறோம். அதிகமான தேவை இருப்பதால் தாய்ப்பால் பற்றாக்குறையாகத்தான் உள்ளது. தாய்மார்கள் தன்னார்வத்துடன் தாய்ப்பாலை தானமாக வழங்க வேண்டும் என்று ஊக்குவித்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சென்னையில் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா தாய்-சேய் நல மருத்துவமனை உள்பட தமிழகத்தில் 22 அரசு மருத்துவமனைகளில் தாய்ப்பால் வங்கிகள் செயல்பட்டு வருகின்றன.

    அரசு மருத்துவமனைகளில் உள்ள தாய்ப்பால் வங்கிகளில் ஒரு நாளைக்கு சராசரியாக 120 லிட்டர் தாய்ப்பால் இருப்பு வைக்கப்படுகிறது. இதன்மூலம் தினமும் சராசரியாக 150-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பால் புகட்டப்படுகிறது.
    15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.1.5 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் தாய்ப்பால் வங்கிகள் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
    சென்னை:

    எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் உலக தாய்ப்பால் வார துவக்க விழா நடைபெற்றது.

    பின்னர் வண்ண பலூன்களை பறக்க விட்டார். தாய்ப்பால் விழிப்புணர்வு கையேட்டினை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வெளியிட தாய்ப்பாலின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்தனர்.

    பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி அமைச்சர் பேசுகையில், “உலகத்தாய்பால் வாரம் ஆகஸ்டு 1-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை கொண்டாடப்படுகிறது. குறைந்தபட்சம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பாலை மட்டுமே கொடுக்க வேண்டும்.

    சுகப்பிரசவம், அறுவை சிகிச்சை பிரசவம் எதுவாயினும் தாய்ப்பாலை உடனே புகட்ட வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதனால் தாயின் மார்பக மற்றும் சினைப்பை புற்றுநோயினை தடுக்கும்.

    உதகமண்டலம், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், நாகப்பட்டினம், கும்பகோணம், கோவில்பட்டி, பெரம்பலூர், விருதுநகர் ராமநாதபுரம் மற்றும் தென்காசி ஆகிய 15 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் ரூ.1.5 கோடி மதிப்பில் பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் தாய்ப்பால் வங்கிகள் இந்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்.”

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Vijayabaskar
    ×